நேற்று,
இந்நேரம் பள்ளி செல்லும் வாகனத்தில்,
ஏறாமல் –
வீட்டுப்பாடம் முடிக்காத பயத்தில் அன்னையின் பின்னால்….
இன்று,
அன்னையும் இல்லை,
பள்ளியும் இல்லை,
வாகனமும் இல்லை,
சக மாணவர்களும் இல்லை,
வீடுகளும் இல்லை,
சாலைகளும் இல்லை,
கட்டிட குவியலுக்கு நடுவில்,
நான் மட்டும்…
வலியில், பசியில்…
ஏன்? ஏன்?? ஏன்???
என்ன நடந்தது?
எதற்காக நடந்தது?
எதுவும் விளங்கவில்லை…
எனது நாய்க்குட்டியின் குரல் எங்கோ கேட்கிறது.
எனது பொம்மை என்னை தேடுகிறது.
என்னால் அசையகூட முடிய வில்லை…
ஏன்? ஏன்?? ஏன்???
வஞ்சத்தை தீர்க்க
பிஞ்சுகளுக்கு
நஞ்சை கொடுப்பது ஏன்? ஏன்?? ஏன்???
இறந்த கால பகையில்,
நிகழ் காலத்தை காக்க என, என்
எதிர் காலத்தை அழிப்பது…
ஏன்? ஏன்?? ஏன்???
இச்சிறு வயதில் – தட்டேந்தி,
பிச்சை எடுக்க வைப்பது ஏன்? ஏன்?? ஏன்???
நேற்று வரை தங்க தொட்டில்,
இன்று மரண கட்டில்…
நேற்று வரை எனை கொஞ்சிய கூட்டம்,
இன்று எதுவும் இல்லை,
வீடுகள் தரை மட்டம்,
அனாதையாக
நான் மட்டும்…
ஏன்? ஏன்?? ஏன்???
அறிவியல் வல்லுனர்கள்,
மருத்துவ அறிஞர்கள்,
சட்ட மாமேதைகள்,
உளவியல் நிபுணர்கள்,
சமூக ஆர்வலர்கள்,
அரசியல் ஆசான்கள்,
அதி மேதாவிகள்- யாரும்
தடுக்க வில்லை…
ஏன்? ஏன்?? ஏன்???
வாழ்ந்து முடித்த கிழவன்கள்,
இன்னும் வாழ ஆசை கொண்டு,
தனது ஆளுமையை நிலைநாட்ட…,
வாழ வேண்டிய தளிர்களை
முடமாக்கி, நடை பிணமாக்கி,
சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்குவது…
ஏன்? ஏன்?? ஏன்???
உலக வல்லரசுகளே,
உங்கள் விளையாட்டுகளை
பிஞ்சு உயிர்களிடம் காட்டுவது ஏன்? ஏன்?? ஏன்???
எனக்கு புரிய வில்லை…
ஏன்? ஏன்?? ஏன்???